சசிகலா-பன்னீரை ஒரே நேரத்தில் வீழ்த்தி, கட்சி - ஆட்சியை கைப்பற்றும் எடப்பாடியின் புதிய வியூகம்! - Asianet News Tamil
NewsFast Logo

சசிகலா-பன்னீரை ஒரே நேரத்தில் வீழ்த்தி, கட்சி - ஆட்சியை கைப்பற்றும் எடப்பாடியின் புதிய வியூகம்!

அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பதாக எழுந்துள்ள முயற்சி, உண்மைதானா? அல்லது வெறும் பேச்சா என்று சந்தேகம் எழுந்துள்ளது

அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பதாக எழுந்துள்ள முயற்சி, உண்மைதானா? அல்லது வெறும் பேச்சா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

தினகரன் மீது தொடுக்கப்படும் அடுத்தடுத்த நெருக்கடிகள் காரணமாக, அவரையும், சசிகலா உறவுகளையும் அரசியலை விட்டு விலக்கியதாக, அமைச்சர்கள் அறிவித்தனர்.

அதன் பிறகு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணிகள் இணைப்புக்கான முயற்சிகள் நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால், இரு தரப்பை சேர்ந்தவர்களும், இது வரை சந்தித்து பேசாமல், ஊடகங்களில் மட்டுமே பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர்.

பன்னீர் தரப்பை பொறுத்தவரை, சசிகலா, தினகரன் உள்ளிட்ட அவரது குடும்ப உறவுகள் அனைவரையும், நீக்கியதாக, கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.

அதேபோல், ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு, தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றனர்.

பன்னீர் தரப்பினரின் நிபந்தனைப்படி, சசிகலா, தினகரன் உள்ளிட்ட அவரது குடும்ப உறவுகள் அனைத்தும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டனர்.

ஜெயலலிதா மரணம் குறித்து, பொதுநல வழக்கு உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் இருப்பதால், மாநில அரசு, சி.பி.ஐ விசாரணைக்கு பரிந்துரைக்க முடியாது என்று எடப்பாடி தரப்பில் அதற்கு பதில் கூறப்பட்டுள்ளது.

அதையும் மீறி, இரு தரப்பை சேர்ந்த தலைவர்களும், ஒருவரை ஒருவர், ஊடகங்களில்  காரசாரமாக விமர்சித்து வருகின்றனர்.

அதனால், அணிகள் இணைப்பு விஷயத்தில் உண்மையில் என்ன நடக்கிறது. இரு தரப்பிலும் எதற்காக இப்படி ஊடகங்களில் மட்டுமே பேசி, ஒருவரை ஒருவர் விமர்சித்து கொண்டு இருக்கின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், எடப்பாடியின் கொங்கு லாபி சார்பில், சசிகலா குடும்பத்தினர், பன்னீர் ஆகிய இரு தரப்பையும் ஒரே நேரத்தில் கட்சியை விட்டு அகற்ற மேற்கொள்ளபட்டுள்ள முயற்சியே இது என்று கூறப்படுகிறது.

அதன்படி, சசிகலா, தினகரன் உள்ளிட்ட குடும்ப உறவுகள் அனைவரும், கட்சியை விட்டு நீக்கப்பட்டு விட்டனர்.

அதன் பின்னரும், முதல்வர் பதவி என்ற, பதவி ஆசை காரணமாகவே, பன்னீர் இவ்வாறு தேவை இல்லாமல், நிபந்தனைகளை விதித்து கொண்டிருக்கிறார்.

அவரை பொறுத்தவரை, அவருக்கு முதல்வர் பதவி மட்டும்தான் குறிக்கோள் என்று அவரது பதவி ஆசையை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, அவரது செல்வாக்கை குறைக்க வேண்டும் என்பதே கொங்கு லாபியின் செயல் திட்டம்.

ஆக, அணிகள் இணைப்பு என்கிற பேச்சு பேச்சாகத்தான் இருக்கும். உண்மையில், சசிகலா குடும்பம், பன்னீர் ஆதரவாளர்கள் என  இரு மாங்காய்களை, வீழ்த்திக் கொண்டிருக்கும் ஒரே கல்லாக எடப்பாடி திகழ்கிறார் என்றும் கூறப்படுகிறது.

 


English Summary

Edapadi K Palanisamy Master plan against Sasikala And OPS

NewsFast Logo