தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்திய மீன்வர்களை சிறைப்பிடித்த நாட்டு மீன்வர்கள்… - NewsFast
NewsFast Logo

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்திய மீன்வர்களை சிறைப்பிடித்த நாட்டு மீன்வர்கள்…

கீழக்கரை அருகே தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த மீனவர்களையும், விசைப்படகையும் நாட்டுப்படகு மீனவர்கள் சிறைபிடித்தனர். 50 கிலோ கடல் அட்டைகளையும், மண்டபம் மீனவர்கள் 5 பேரையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இராமநாதபுரம்,

கீழக்கரை அருகே தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த மீனவர்களையும், விசைப்படகையும் நாட்டுப்படகு மீனவர்கள் சிறைபிடித்தனர். 50 கிலோ கடல் அட்டைகளையும், மண்டபம் மீனவர்கள் 5 பேரையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து அரசால் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி சில மீனவர்கள் மீன்பிடித்து வருவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இன்னும் சில மீனவர்கள் கடற்கரையில் இருந்து நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதியான 3 கடல்மைல் தூரத்திற்குள் விசைப்படகுகளில் அத்துமீறி தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதாகவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள சின்ன ஏர்வாடி கடல்பகுதியில் நேற்று முன்தினம் இரவு மண்டபம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் சிலர் 2 கடல்மைல் தூரத்திற்குள் அத்துமீறி தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

இதனை கண்ட சின்ன ஏர்வாடி கடற்கரை பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் உடனடியாக தங்களின் படகில் சென்று தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து கொண்டிருந்த மண்டபம் மீனவர்களின் படகை சுற்றி வளைத்து சிறைபிடித்தனர்.

அந்த படகினை சோதனையிட்டபோது அதில் தடைசெய்யப்பட்ட கடல்அட்டைகள் இருந்ததை கண்ட நாட்டுப்படகு மீனவர்கள் இதுகுறித்து கீழக்கரை வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கீழக்கரை வனச்சரகர் சிக்கந்தர்பாட்சா தலைமையில் வனவர் இன்னாசிமுத்து, வனக்காப்பாளர் இராஜேந்திரன், வன காவலர் சந்திரசேகரன் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் சின்ன ஏர்வாடி கடற்கரை பகுதிக்கு விரைந்து சென்று காத்திருந்தனர்.

அங்கு சிறைப்பிடிக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட விசைப்படகை வனத்துறையினர் பிடித்து சோதனையிட்டபோது அதில் அரசால் தடைசெய்யப்பட்ட 50 கிலோ எடையுள்ள 394 கடல்அட்டைகள் இருந்ததை கண்டு அவற்றையும் படகையும் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக படகில் இருந்த மண்டபம் பகுதியைச் சேர்ந்த முகம்மது சுபுகானி மகன் யூசுப் (30), முகைதீன் சீனிப்பை மகன் முகம்மது ரமலான் (35), முகைதீன் அப்துல்காதர் மகன் அல்லாபிச்சை (34), யூசுப் மகன் ஜமால்முகம்மது (30), இப்ராம்சா மகன் அப்பாஸ் (37) ஆகிய 5 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

இதன் மூலம் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கும் கடல்பகுதிக்குள் அத்துமீறி தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்ததோடு, கடல்அட்டைகளையும் பிடித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இவர்கள் 5 பேரும் இராமநாதபுரம் நீதிமன்றத்தில் நீதிபதி இன்பகார்த்திக் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டு அவரது உத்தரவின்பேரில் இராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி நாட்டுப்படகு மீனவர்களின் பகுதிக்குள் மீன்பிடிப்பது தொடர்பாக தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வரும் நிலையில் மீனவர்களே களத்தில் இறங்கி கையும் களவுமாக பிடித்து கடல்அட்டைகளுடன் ஒப்படைத்துள்ளது வரவேற்கத்தக்கது.

NewsFast Logo