விவசாயத் துறை செயல்படுத்தும் திட்டங்களை ஆட்சியர் ஆய்வு… - NewsFast
NewsFast Logo

விவசாயத் துறை செயல்படுத்தும் திட்டங்களை ஆட்சியர் ஆய்வு…

இராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயத் துறை செயல்படுத்தும் திட்டங்களை ஆட்சியர் நடராஜன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இராமநாதபுரம்,

இராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயத் துறை செயல்படுத்தும் திட்டங்களை ஆட்சியர் நடராஜன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயத் துறை மற்றும் அதனை சார்ந்த துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு வேளாண் எந்திரமயமாக்குதல் துணை திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்களை நியாயமான விலையில் வழங்கும் வகையில் அனைத்து வட்டாரங்களிலும் வாடகை மையம் அமைக்க 40 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின்கீழ் திருப்புல்லாணி யூனியன் ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர் ரூ.26 இலட்சம் மதிப்பிலான டிராக்டர்கள், பவர் டில்லர்கள், கலப்பைகள் வாங்கி வாடகைக்கு விட்டுவருகிறார்.

நபார்டு நிதி உதவியுடன் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட பண்ணைகுட்டைகள் ஆழப்படுத்தும் திட்டத்தின்கீழ் ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்த செல்லக்கருங்கு என்பவருக்கு பண்ணை குட்டை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அவர் சுமார் 50,000 கனஅடி மழைநீரை சேமித்து பயிர்களுக்கு பயன்படுத்த முடியும். மேலும், புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகத்தின் சார்பில் அரசு மானியத்தில் திருப்புல்லாணி பகுதியை சேர்ந்த ஜவாஹிர் என்பவரின் நிலத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட் ரூ.3 இலட்சத்து 84 ஆயிரம் மானியத்துடன் ரூ.5 இலட்சத்து ஆயிரத்து 152 செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய எண்ணெய் வித்து மற்றும் பனை இயக்க திட்டத்தின்கீழ் குதக்கோட்டை கிராமத்தில் உமர்நேசன் என்பவரின் ஒரு எக்டர் நிலத்தில் வேம்பு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுஉள்ளது. இதற்காக இவருக்கு ரூ.17 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

விலையில்லா கறவை பசு வழங்கும் திட்டத்தின்கீழ் இந்த ஆண்டு மேதலோடை கிராமத்தில் ரூ.20 இலட்சத்து 62 ஆயிரத்து 500 மதிப்பில் 50 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கறவை மாடுகளின் பால் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.

ஆலங்குளம் கிராமத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் உவர்நீர் நன்னீராக்கும் திட்டத்தின்கீழ் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் ரூ.8 இலட்சத்து 50 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதேபோன்று 79 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் சார்பில் மண்டபம் வட்டாரம் நாகாச்சி கிராமத்தில் திருமலைவேலு என்பவருடைய இடத்தில் ஒரு எக்டர் பரப்பளவில் மா அடர் நடவு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.9800 மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் 31,664 மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்களை ஆட்சியர் நடராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்து பயனாளிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

அப்போது வேளாண் இணை இயக்குனர் அரிவாசன், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் மோகன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெள்ளைச்சாமி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் முகம்மதுஅலி, தோட்டக்கலை உதவி இயக்குனர் அழகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

NewsFast Logo