எய்ட்ஸ் இல்லா மாவட்டமாக நாகையை மாற்ற மாணவர்களின் பங்கு தேவை…c - Asianet News Tamil
NewsFast Logo

எய்ட்ஸ் இல்லா மாவட்டமாக நாகையை மாற்ற மாணவர்களின் பங்கு தேவை…c

நாகை மாவட்டத்தில் வரும் ஆண்டை எச்.ஐ.வி. எய்ட்ஸ் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு மாணவர்களின் பங்கு

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் வரும் ஆண்டை எச்.ஐ.வி. எய்ட்ஸ் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு மாணவர்களின் பங்கு பெரிதும் தேவைப்படுகிறது என்று ஆட்சியர் பழனிசாமி கூறினார்.

நாகப்பட்டினத்தில் “உலக எய்ட்ஸ் தினம்” விழிப்புணர்வு கருத்தரங்கம் நாகை மாவட்ட ஆட்சியர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

முதலில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணியினை ஆட்சியர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இதில் மருந்தியல் துறை பயிற்சி மாணவ, மாணவிகள் சுமார் 500–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழியினை ஆட்சியர் பழனிசாமி வாசிக்க, மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் பின்பற்றி உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

பின்னர், ஆட்சியர் பேசியதாவது:

“எச்.ஐ.வி. தொற்று குறித்து எதிர்கால சந்ததியினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு டிசம்பர் திங்கள் முதல் நாளை உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

நாகை மாவட்டத்தில் வரும் ஆண்டை எச்.ஐ.வி. எய்ட்ஸ் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு மாணவர்களாகிய உங்களது பங்கு பெரிதும் தேவைப்படுகிறது. மேலும், மாணவர்களாகிய நீங்கள் மாவட்டத்தில் உள்ள மற்ற இளைஞர்களுக்கும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

பரிசோதிக்கப்படாத இரத்தம், சுத்திகரிக்கப்படாத ஊசியை பயன்படுத்துதல், பாதுகாப்பற்ற உடலுறவு உள்ளிட்ட காரணங்களால் உயிர் கொல்லி நோயான எய்ட்ஸ் தொற்று பரவுகிறது.

எச்.ஐ.வி. ஒரு வைரஸ் கிருமியாகும். இது நமது உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து எய்ட்ஸ் எனப்படும் நிலைக்கு கொண்டு சென்று விடும்.

எச்.ஐ.வி. தொற்றால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது பலவித நோய்களுக்கு ஆளாக நேரிடும். மாவட்டத்தில் காசநோய் உள்ள அனைவரும் எச்.ஐ.வி. பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அதேபோல எச்.ஐ.வி. தொற்று உள்ள அனைவரும் காசநோய் (சளி) பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், ஏனெனில் எச்.ஐ.வி.யும், காசநோயும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகும்.

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதாரமையங்களில் எச்.ஐ.வி. பரிசோதனை செய்யப்படுகிறது. அவ்வாறு செய்யும் பரிசோதனையில் எந்த கர்ப்பிணி பெண்ணுக்காவது எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த கர்ப்பிணிக்கு பிறக்கும் குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று பரவாமல் இருக்க எச்.ஐ.வி. எனப்படும் தடுப்பு மருந்து கருவுற்ற 14 வாரங்களில் தாய்க்கு ஆரம்பிக்கப்பட்டு தாய்ப்பால் நிறுத்தும் வரை கொடுக்கப்படுகிறது.

நாகை மாவட்டத்தில் 2011 முதல் பிறந்த குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மருத்துவர்களும், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க பணியாளர்களும், இணைந்து சேவை புரிவதன் மூலம் தொற்று குறைக்கப்பட்டுள்ளது.

உயிர் கொல்லி நோயான எய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உக்திகளை கையாண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் நாகை மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைகளில் இரத்தவங்கி செயல்பட்டு வருகிறது. அரியவகை இரத்த வகைகளும் போதுமான அளவு இருப்பில் உள்ளது.

எச்.ஐ.வி. தொற்றுள்ளோர் உரிய சிகிச்சை பெற்று தங்கள் வாழ்நாளை நீட்டித்து கொள்ள வேண்டும்.

எச்.ஐ.வி. தொற்று பாதிப்பு உள்ள நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்படுகின்றன” எண்ட்ரு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் இணை இயக்குனர் (சுகாதார பணிகள்) செந்தில்குமார், துணை இயக்குனர் (காசநோய்) முருகப்பன், மாவட்ட திட்ட மேலாளர் சக்திவேல், எச்.ஐ.வி. உள்ளோர் நலச்சங்க செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

NewsFast Logo