இலங்கைக்கு கடத்த முயன்ற கருக்கலைப்பு மாத்திரைகள்… - NewsFast
NewsFast Logo

இலங்கைக்கு கடத்த முயன்ற கருக்கலைப்பு மாத்திரைகள்…

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், 1 இலட்சத்து 23 ஆயிரத்து 883 மாத்திரைகள் கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி இலங்கைக்கு கடத்த

இராமநாதபுரம்,

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், 1 இலட்சத்து 23 ஆயிரத்து 883 மாத்திரைகள் கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி இலங்கைக்கு கடத்த முயன்ற இளைஞரை காவளர்கள் கைது செய்தனர். கடத்தலில் தொடர்புடைய மற்றவர்களையும் பிடிக்க காவலாளர்கள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

இராமநாதபுரத்திற்கு சென்னையில் இருந்து வரும் தனியார் ஆம்னி பேருந்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் சூப்பிரண்டு மணிவண்ணனுக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து இராமநாதபுரம் உதவி காவல் சூப்பிரண்டு சர்வேஸ்ராஜ் தலைமையில் தனிப்படை காவலாளர்கள் பேருந்து நிலையம் பகுதியை கண்காணித்தனர்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் ஆம்னி பேருந்தில் வந்த பார்சலை வாங்கி ஆட்டோவில் ஏற்ற முயன்றபோது காவலாளர்கள் மடக்கி பிடித்தனர். பார்சலையும் பறிமுதல் செய்தனர். அவர்களை இராமநாதபுரம் நகர காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தனர்.

அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பார்சலை பிரித்தபோது அதில் 10 அட்டை பெட்டிகளில் சுமார் 1 இலட்சத்து 23 ஆயிரத்து 883 மாத்திரைகள் இருந்ததை காவலாளர்கள் கண்டுபிடித்தனர்.

பிடிபட்ட இளைஞர் ராமநாதபுரம் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த வேலு என்பவரது மகன் ராஜேந்திரன் (35) என்பது தெரியவந்தது.

ராஜேந்திரனிடம், காவலாளர்கள் விசாரணை நடத்தியபோது, சென்னையில் இருந்து காதர் என்பவர் இந்த பார்சலை அனுப்பி வைத்ததாகவும், செல்போனில் தகவல் சொன்னதன்பேரில் அதை பெற்று வந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்த பார்சலை இராமேசுவரத்தை சேர்ந்த டேவிட் என்பவர் ஆட்களை அனுப்பி பெற்றுக் கொள்வார் என்றும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக காவலாளர்கள் மேலும் விசாரணை நடத்தியபோது, டேவிட் இந்த மாத்திரைகளை இராமேசுவரம் வழியாக படகில் இலங்கையைச் சேர்ந்த ஜோசப் என்பவருக்கு அனுப்பி வைக்க இருப்பது தெரியவந்தது.

மேலும், அந்த மாத்திரைகள் அனைத்தும் கருக்கலைப்பிற்கான அபாயகரமான மாத்திரைகள் என்பதும், சில மாத்திரைகள் உடல்வலி நிவாரணி மாத்திரைகள் என்பதும் தெரியவந்தது.

இந்த மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வெளியில் விற்பனை செய்யக்கூடாது என்பதோடு, அங்கீகாரம் பெற்ற மருந்து விற்பனையாளர் மட்டுமே வாங்கி விற்பனை செய்ய முடியும் என்பது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகள் ரூ.5 இலட்சம் மதிப்புடையது என்றும், இந்த மாத்திரைகள் இலங்கையில் கிடைக்காததால் அங்கு இந்த மாத்திரைகள் அதிக விலை கொடுத்து வாங்கப்படுவதாகவும்,

இதனால், இந்த மாத்திரைகளை திருட்டுத்தனமாக வாங்கி இலங்கைக்கு கடத்தும் வேலையில் இந்த நபர்கள் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இந்த மாத்திரைகளை சோதனையிட்டபோது கருக்கலைப்புக்காக பயன்படுத்தும் மாத்திரைகள் என்பதும், சாதாரணமாக இந்த மாத்திரைகள் கிடைக்காததால் அதிக அளவில் இந்த மாத்திரைகளை கடத்தி இலாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இந்த கும்பல் செயல்பட்டதும் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து ராஜேந்திரனை காவலாளர்கள் கைது செய்தனர். இந்த கடத்தலில் சம்பந்தப்பட்ட மற்றர்களையும் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

NewsFast Logo