இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் 35பேர் கைது… - NewsFast
NewsFast Logo

இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் 35பேர் கைது…

கோவில்பட்டியில், “மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற” வலியுறுத்தி இரயில் மறியலில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் 35 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில், “மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற” வலியுறுத்தி இரயில் மறியலில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் 35 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசின் அனைத்து திட்டங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை முறையாக நிறைவேற்ற வேண்டும்.

ஐ.நா.சபை அங்கீகரித்த 18 வகையான ஊனம் உடையவர்களை மாற்றுத் திறனாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மாநிலம் முழுவதும் இரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, வெள்ளிக்கிழமை காலையில் கோவில்பட்டி இரயில் நிலையம் முன்பு மாற்றுத் திறனாளிகள் கூடியிருந்தனர். காலை 11.40 மணியளவில் தாதர் – நெல்லை விரைவு கோவில்பட்டி இரயில் நிலையத்திற்கு வந்தது.

அப்போது திடிரென மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர், இரயில் எஞ்சின் முன்பு மறியலில் ஈடுபட்டனர். முழக்கங்களையும் எழுப்பினர்.

இந்த போராட்டத்தில், சங்க மாவட்ட செயலாளர் முத்துகாந்தாரி, ஒன்றிய தலைவர் முத்துமாலை, செயலாளர் சாலமன்ராஜ், துணை தலைவர் போத்திலட்சுமி, நகர செயலாளர் சர்க்கரையப்பன், துணை செயலாளர் திருப்பதி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கார்த்திக், நகர செயலாளர் மாடசாமி, விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் மணி, மாவட்ட குழு உறுப்பினர் முத்து மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இரயில் மறியலில் ஈடுபட்ட 16 பெண்கள் உள்ளிட்ட 35 பேரை கோவில்பட்டி துணை காவல் சூப்பிரண்டு முருகவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பவுல்ராஜ் (கிழக்கு), ராஜேஷ் (மேற்கு), ஜூடி (நாலாட்டின்புத்தூர்) மற்றும் காவலாளர்கள் கைது செய்தனர்.

இதனால், இரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. காவலாளர்கள் கைது செய்யப்பட்டவர்களை இரயில் நிலையத்தில் இருந்து அப்புறப்படுத்தி அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

NewsFast Logo