திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தோடு பெண்ணை கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை… - Asianet News Tamil
NewsFast Logo

திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தோடு பெண்ணை கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை…

திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தோடு பெண்ணை கடத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்தும் கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கரூர்,

திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தோடு பெண்ணை கடத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்தும் கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வடுகம்பாடியை சேர்ந்தவர் நாகராஜ் (38). கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சத்யா (21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

சத்யாவைத் திருமணம் செய்துகொள்ள விரும்பிய நாகராஜ் அவரது வீட்டில் பெண் கேட்டுள்ளார். பெண் கொடுக்க அவரது குடும்பத்தினருக்கு விருப்பமில்லாததால் மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 26-ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சத்யாவை, நாகராஜ் அவரது நண்பர்களான வேணுகோபால் (33), கிட்டனன் என்கிற பெருமாள் (44), தங்கவேல் (45), பாலசுப்பிரமணி (33), முருகன் (37) ஆகியோருடன் சேர்ந்து காரில் கடத்திச் சென்றுள்ளார். பின்னர் அவரை கடவூரில் உள்ள ஒரு வீட்டில் 5 நாள்கள் அடைத்து வைத்துள்ளார்.

இதுகுறித்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் சத்யாவின் தாய் புகார் அளித்தார். அந்தபு காரின் பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து நாகராஜ் உள்பட 6 பேரை தீவிர விசாரணைக்குப் பிறகு கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்புக் கூறப்பட்டது.

இதில் திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தோடு சத்யாவை கடத்திய குற்றத்திற்காக நாகராஜிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் மற்ற 5 பேரை வழக்கில் இருந்து விடுதலை செய்தும் நீதிபதி தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து நாகராஜை காவலாளர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

 

NewsFast Logo