Asianet News TamilAsianet News Tamil

சும்மா தெறிக்கவிட்ட தோனி & கோ.. கடைசி பந்தில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில்  4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
 

ipl chennai  won rajastan
Author
Rajasthan, First Published Apr 12, 2019, 7:16 AM IST

8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற  சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரஹானே, ஜோஸ் பட்லர் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் ஜோஸ் பட்லர் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரும், 2-வது ஓவரில் ரஹானே தொடர்ந்து 2 பவுண்டரியும் விளாசி அமர்க்களமாக ஆட்டத்தை தொடங்கினார்கள். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 

ipl chennai  won rajastan

3-வது ஓவரில் தீபக் சாஹர் பந்து வீச்சில் ரஹானேவுக்கு (14 ரன், 11 பந்து, 3 பவுண்டரி) எதிராக எல்.பி.டபிள்யூ. கேட்டு அப்பீல் செய்யப்பட்டது. ஆனால் நடுவர் அவுட் கொடுக்க மறுத்ததை தொடர்ந்து சென்னை அணியின் கேப்டன் டோனி டி.ஆர்.எஸ். முறையில் நடுவரின் முடிவுக்கு எதிராக முறையீடு செய்தார். இதனை ஆய்வு செய்த 3-வது நடுவர் ரஹானே அவுட் என்று அறிவித்தார். அடுத்து களம் கண்ட சஞ்சு சாம்சன் தான் சந்தித்த முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார். 

ipl chennai  won rajastan

அணியின் ஸ்கோர் 15 ஓவர்களில் 103 ரன்னாக இருந்த போது ரியான் பராக் (16 ரன், 14 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) ஷர்துல் தாகூர் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து . நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. ஜோப்ரா ஆர்ச்சர் 12 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 13 ரன்னும், ஸ்ரேயாஸ் கோபால் 7 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 19 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டும், மிட்செல் சான்ட்னெர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

ipl chennai  won rajastan

பின்னர் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் ரன் எதுவும் எடுக்காமலும், சுரேஷ் ரெய்னா 4 ரன்னும், பாப் டுபிளிஸ்சிஸ் 7 ரன்னும், கேதர் ஜாதவ் 1 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்து அதிர்ச்சி தொடக்கம் அளித்தனர். இதனால் அந்த அணி 5.5 ஓவர்களில் 24 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

5-வது விக்கெட்டுக்கு கேப்டன் டோனி, அம்பத்தி ராயுடுவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அணியின் ஸ்கோர் 17.4 ஓவர்களில் 119 ரன்னாக உயர்ந்த போது அம்பத்தி ராயுடு பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ஸ்ரேயாஸ் கோபாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து ரவீந்திர ஜடேஜா களம் இறங்கினார்.

ipl chennai  won rajastan

கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் வீசிய அந்த ஓவரில் முதல் பந்தை ரவீந்திர ஜடேஜா சிக்சருக்கு தூக்கினார். நோபாலாக வீசப்பட்ட 2-வது பந்தில் ரவீந்திர ஜடேஜா ஒரு ரன் ஓடினார். அதற்கு அளிக்கப்பட்ட ‘பிரீ ஹிட்’ வாய்ப்பை எதிர்கொண்ட டோனி 2 ரன்கள் அடித்தார். அடுத்த பந்தில் டோனி  போல்டு ஆனார். 

இதனை அடுத்து களம் கண்ட மிட்செல் சான்ட்னெர் தான் சந்தித்த முதல் பந்தில் 2 ரன் எடுத்தார். அந்த பந்து உயரமாக வீசப்பட்டதால் ஆடுகளத்துக்கு வெளியில் இருந்து மைதானத்துக்குள் புகுந்த டோனி அந்த பந்தை நோ-பாலாக அறிவிக்கும்படி நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார். ஆனால் அவரது கோரிக்கையை நடுவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். 5-வது பந்தில் சான்ட்னெர் 2 ரன் அடித்தார். 

ipl chennai  won rajastan

கடைசி பந்தில் 4 ரன் தேவை என்ற நிலையில் அந்த பந்து வைடாக வீசப்பட்டது. இதையடுத்து 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. கடைசிப் பந்து… மைதானம் முழுவதும் சென டென்ஷன்…. இந்நிலையில்தான் சான்ட்னெர்  அந்த கடைசிப் பந்தை சிக்சர் விளாசி  அனைவரையும் கொண்டாட வைத்தார்.

20 ஓவர்களில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது.. இந்த சீசனில் சென்னை அணி 2-வது முறையாக ராஜஸ்தானை வீழ்த்தியது. சென்னை அணியின் கேப்டன் டோனி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios