Asianet News TamilAsianet News Tamil

காலையில் வெறும் வயிற்றில் என்னவெல்லாம் சாப்பிடணும்; எதையெல்லாம் சாப்பிடவேக் கூடாது?

What can be eaten on a stomach in the morning What to eat?
What can be eaten on a stomach in the morning What to eat?
Author
First Published Sep 22, 2017, 1:28 PM IST


நம் உடல், ஒரு நாள் முழுக்க எப்படி இயங்கப்போகிறது என்பதே நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது.

இந்த உணவானது நம் உடல்நிலையைப் பொறுத்தும், சூழ்நிலையைப் பொறுத்தும்தான் இருக்க வேண்டுமே த‌விர, அட்டவணைப்படி எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

** தண்ணீர்

ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும். சிலர், வெந்நீர் அருந்துவார்கள். ஆனால், குளிர்ந்த நீர் குடிப்பதுதான் சிறந்தது. ஏனெனில், குளிர்ந்த நீருக்கு அசிடிட்டியைக் குறைக்கும் தன்மை, வெந்நீரைக் காட்டிலும் அதிகம்.

தண்ணீரானது, அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தைச் சமன்செய்து, வயிற்றைச் சீராக இயக்க உதவுகிறது. தொடர்ந்து தண்ணீர் குடித்து வருவதால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்பருமன், சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களின் தாக்கத்தையும் நம்மால் வெகுவாகக் குறைக்க முடியும்.

முக்கால் லிட்டர் நீரையும் முழுமையாகக் குடிக்க முடியாதவர்கள் 5 நிமிட இடைவெளியில் நான்கு டம்ளராகப் பிரித்துக் குடிக்கலாம்.

** வெந்தயம்

சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்களுக்கு நல்ல தடுப்பணை வெந்தயம். மேலும் உடல் சூட்டைத் தணிக்கும் அருமருந்தும் இதுதான். வெந்தயத்தை, முந்தைய நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள், வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும்.

வாயில் வெந்தயத்தை அப்படியே போட்டுத் தண்ணீர் குடிப்பது, மோருடன் சேர்த்துக் குடிப்பது கூடவே கூடாது. வெந்தயத்தை ஊறவைக்காமல் சாப்பிட்டால் அதைச் சுற்றியுள்ள மேல் உறை செரிமானத்தைத் தாமதப்படுத்தி மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும்.

வெந்தயம், மோர் இரண்டுமே குளிர்ச்சியைத் தரக்கூடியது என்பதால், உடனடியாகச் சளி பிடிக்க அதிக வாய்ப்புகள் உண்டு. சில சமயங்களில் இந்த காம்பினேஷன் வயிற்றுப் போக்குக்கும் வழிவகுத்துவிடும் என்பதால் கவனம் தேவை.

** அருகம்புல் சாறு

அல்சருக்கு அருமருந்தே வெறும் வயிற்றில் பருகும் அருகம்புல் சாறுதான். ஆனால், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அருகம்புல் பொடி, நம் உடலுக்கு உகந்தது அல்ல. அருகம்புல் தாவரத்தின் இலை மற்றும் தண்டுப் பகுதியின் கலவைதான் இது. அருகம்புல் தண்டு மட்டும்தான் மருத்துவக் குணமுடையது.

இந்த இலையின் ஓரங்களில் உள்ள வெள்ளையான சுனைப் பகுதியானது நச்சுத்தன்மை கொண்டதால், வயிற்றுப்போக்கைத் தூண்டிவிடும் அபாயம் கொண்டது. எனவே அருகம்புல் செடியை வீட்டிலே அரைத்து சாறு எடுத்து, வெந்நீருடன் பயன்படுத்துவது நல்லது.

** இஞ்சி

இஞ்சியின் தோல் பகுதி நச்சுத்தன்மை வாய்ந்தது. இஞ்சித் தோலை நீக்கிவிட்டு, சாறு எடுத்து அதோடு தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு குறைவதுடன் நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும். ஆனால், வாய்ப்புண், வயிற்றுப்புண், ஆசனப்புண் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

** நீராகாரம்

காலையில் எழுந்த உடன் நீராகாரம் அருந்துவது இன்றும் கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும் பழக்கம். இதனால், உடலுக்குக் குளிர்ச்சியும், தேவையான கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கிறது. நீராகாரத்துடன் கடைந்த மோர் சேர்த்துக் குடிப்பது நல்லது.

** நெல்லிக்காய்ச் சாறு

தினமும் வெறும் வயிற்றில், நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். இதில், ‘ஆன்டிஆக்சிடன்ட்ஸ்’ அதிகளவு இருப்பதால் சருமப் பாதுகாப்புக்கும், சிறுநீரகத் தொற்றுநோய்களுக்கும் மிகவும் சிறந்தது. இதில், சிறிதளவே, அமிலத்தன்மை இருந்தாலும் எலுமிச்சை அளவுக்கு வலிமையான அமிலம் இல்லை. எல்லா வயதினரும், வெறும் வயிற்றில் தாராளமாகக் குடிக்கலாம்.

** இளநீர்

இளநீர் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லதுதான் என்றாலும் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால் அதன் அதிகப்படியான குளிர்ச்சியூட்டும் தன்மையால், தூங்கி எழுந்தவுடன் சற்று சூடாக இருக்கும் நம் வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் கூட அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது.

மேலும், வெறும் வயிற்றில் குடிக்கும்போது, இளநீரில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம், குளுக்கோஸ் போன்ற தாதுக்கள் வெளியேற முடியாமல் சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடலாம். எனவே, உணவு இடைவேளையில்தான் இளநீர் அருந்த வேண்டும். அதுவும் வெட்டிய உடன் இளநீரைக் குடித்துவிட வேண்டும், இல்லையெனில் ஃபுட் பாய்ஸன் ஆகிவிடும்.

Follow Us:
Download App:
  • android
  • ios