Asianet News TamilAsianet News Tamil

வீட்டு வைத்தியத்தின் மூலமே சிறுநீரக கல்லை குணமாக்கலாம்...எப்படி?

Home remedies can cure kidney stones ... How?
Home remedies can cure kidney stones ... How?
Author
First Published Apr 19, 2018, 1:55 PM IST


தலைவலி, பல்வலி போல பலரையும் பரவலாக தாக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக இன்றைக்கு உருவெடுத்துக் கொண்டிருக்கிறது சிறுநீரகக்கல்.

இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள், பின்னணி, சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி பிரபல சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்றுதிரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம். 

சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர்க் குழாய் வழியே சிறுநீர்ப் பைகளுக்கு வந்து பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கிப் பெரிதாகலாம். குழாய் மூலம் சிறுநீர் பைக்கு வெளியேறலாம். அல்லது அடைப்பு ஏற்படுத்தலாம்.

அறிகுறிகள் என்ன ?

முதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்குத் தாவினாலோ, அடிவயிற்றில் வலித்தாலோ, அது தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவினாலோ, காய்ச்சல், சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை இருந்தாலோ சிறுநீரக்கல்லாக இருக்கலாம்.

தைராய்டு பிரச்சினை

பரம்பரையாக சிறுநீரகக்கல் பிரச்சினை ஒருவரைத் தாக்கலாம். சிறுநீர் போகிற பாதையில் அடைப்பிருந்தாலோ, பாரா தைராய்டு எனப்படுகிற சுரப்பியின் அதீத இயக்கம் காரணமாகவோ, இன்ஃபெக்ஷன் காரணமாகவோ கூட சிறுநீரகத்தில் கல் வரலாம். அலட்சியப்படுத்தினால் கல் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி, மான் கொம்பு அளவுக்கு வளர்ந்து நிற்கும்.

5 மில்லிமீட்டரை விட சிறிய கல் எனில் சிறுநீரிலேயே வெளியேறி விடும். 8 மி.மீ. என்றால் 80 சதவிகித வாய்ப்புண்டு. 1 செ.மீ. அளவுக்கு வளர்ந்துவிட்டால் சிரமம். சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் சிறுநீரகம், சிறுநீரைப் பிரிக்க இயலாது, செயலிழக்கும்.

ரத்தப்பரிசோதனை மூலம் கல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பிறகு ஸ்கேன் உதவியுடன், கல் இருக்கும் இடம், அதன் அளவைத் தெரிந்து கொள்ளலாம். அய்.வி.பி. எக்ஸ்ரே மூலம் சிறுநீரகம் எப்படி இயங்குகிறது என்பதையும், அதில் அடைப்புள்ளதா, வேலை செய்யும் திறனை இழக்குமா என்பனவற்றைக் கண்டுபிடிக்கலாம். மருந்துகளால் முடியாத பட்சத்தில், அதிர்வலை சிகிச்சை மூலம் கல்லை மட்டும் உடைத்தெடுக்கலாம்.

பெரிய கல் என்றால் முதுகுவழியே துளையிட்டு, டெலஸ்கோப் வழியே பார்த்து உடைக்கலாம். சிறுநீர் பாதை வழியே டெலஸ்கோப்பை செலுத்தி உடைக்கிற யூரெத்ரோஸ்கோப்பியும் பலனளிக்கும். ஒருமுறை கல்லை அகற்றினால் மறுபடி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

வீட்டு வைத்தியம்

சிறுநீரக் கல்லை வெளியேற்ற வீட்டிலேயே மருந்து உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு 2 முறையாவது குடிப்பது நலம்.

பார்லியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம். அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.

வாழைத்தண்டு

முள்ளங்கி சாறு 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும். வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம் சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து. பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புதினாக் கீரையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.

எதை சாப்பிடக்கூடாது?

சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, 

கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பை&கார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவைகளை தவிர்க்க வேண்டும். கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios